விண்டோஸ் XPயிலிருந்து விண்டோஸ் 7 மாற வேண்டுமா..?
விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் பைல்கள் இனி கட்டாயமாக நிறுத்தப்படும் என, அதற்கான நாளை (ஏப்ரல் 8) மைக்ரோசாப்ட் அறிவித்ததிலிருந்து, பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 7க்கு மாறி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் இடையே பல வேறுபாடுகளை அவற்றின் செயல்பாட்டில் காணலாம். இவற்றைப் புரிந்து கொண்டால், சிஸ்டம் மாறுவது எந்த பிரச்னையையும் தராது. மேலும், வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால், இயக்குவது எளிமையாகவும், கூடுதல் பலன்களைத் தருவதாகவும் அமையும்.
விண்டோஸ் 7 மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலிருந்து மாறுபாடுகள் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 13 ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்த எக்ஸ்பியுடன் ஒப்பிடுகையில், அதிக வேறுபாடுகளைக் காணலாம். இருப்பினும், எக்ஸ்பிக்குப் பின்னால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் பார்த்தால், விண்டோஸ் 7 ஒரு பயனுள்ள சிஸ்டமாகவே இருக்கிறது. கூடுதல் பாதுகாப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் இணைந்த செயல்பாடு, கூடுதல் சக்தி என இதனைச் சுருக்கமாகக் கூறலாம். இவற்றைத் தரும் சில அம்சங்களை இங்கு காணலாம்.
1. டாஸ்க்பார்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் பார் விண்டோஸ் எக்ஸ்பியில் இருப்பதைக் காட்டிலும் மாறுபாடான ஒன்றாகும். எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்கு குயிக் லாஞ்ச் பகுதி (“quick launch”) கிடைத்தது.இதில் நமக்குத் தேவையான புரோகிராம்களுக்கான சுருக்க வழிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் கிளிக் செய்வதன் மூலம், மிக எளிதாக அந்த புரோகிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வர முடிந்தது. இத்துடன் டாஸ்க் பாரும் கிடைத்தது. இதில் நாம் இயக்கும் புரோகிராம்கள் அவற்றின் ஐகான்கள் மூலம் நமக்குக் காட்டப்பட்டு வந்தன.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. டாஸ்க் பாரில் உள்ள ஐகான்கள், புரோகிராம்களுக்கான சுருக்கு வழிகளையும், திறக்கப்பட்டுள்ள புரோகிராம்களையும் காட்டுவதாக உள்ளது. பார்டருடன் உள்ள ஐகான்கள், அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களையும், பார்டர் இல்லாத ஐகான்கள் இன்னும் இயக்கப்படாத புரோகிராம்களுக்கான சுருக்க வழிகளாகவும் இங்கு காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த ஒன்றில் கிளிக் செய்தாலும், அது இயங்கிக் கொண்டிருந்தால், அந்த புரோகிராமின் விண்டோ உங்களுக்காகக் காட்டப்படும். இல்லை எனில், அது இயக்கப்படும்.
நீங்கள் திறந்து இயக்கும் புரோகிராம்கள் டாஸ்க் பாரில் காட்டப்படும். அவை மூடப்படும்போது, அவற்றிற்கான ஐகான்கள் பொதுவாக மறைந்துவிடும். அவ்வாறின்றி, புரோகி ராம்களின் ஐகான்கள் எப்போதும் டாஸ்க்பாரில் காட்டப்பட வேண்டும் எனில், புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Pin this program என்பதில் கிளிக் செய்தால் போதும். இதனை அடுத்து, அந்த புரோகிராம் இயங்கினாலும், இயங்காவிட்டாலும், அதன் ஐகான் டாஸ்க் பாரில் காட்டப்படும். இவ்வாறு அமையும் புரோகிராம் ஐகான்களை, இழுத்து நாம் விரும்பும் வரிசையில் அமைத்துக் கொள்ளலாம்.
டாஸ்க் பார் ஐகான் ஒன்றில் ரைட் கிளிக் செய்கையில், அந்த புரோகிராமிற்கான பட்டியல் ஒன்று மேலெழுந்து கிடைக்கும். இதனை “jump list” என அழைக்கின்றனர். இந்த பட்டியலில், குறிப்பிட்ட புரோகிராமில் அப்போது உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட பைல்களும், சில பொதுவான செட்டிங்ஸ் வகைகளும் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் பதிந்து இயக்கப் பட்டிருந்தால், அதன் ஐகானில் கிளிக் செய்து, அண்மையில் பயன்படுத்திய பைல்களின் பெயர்களைப் பார்த்து, தேவையான, திறந்து பயன்படுத்த விரும்பும் பைலின் மீது கிளிக் செய்து திறக்கலாம்.
இந்த டாஸ்க் பார், புரோகிராம் ஒன்றில் திறக்கப்பட்டுள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களை, ஒரு டாஸ்க் பார் நிகழ்வாக அமைக் கிறது. தேவைப்படும் ஐகான் மீது மவுஸின் கர்சரைச் சுழற்றி வந்தால் அல்லது கிளிக் செய்தால், கிடைக்கும் பட்டியலில் இருந்து, நாம் விரும்பும் விண்டோவினைத் திறக்கலாம்.
இவ்வளவு வசதிகள் இருந்தும் உங்களுக்கு இந்த டாஸ்க் பாரில் விருப்பம் இல்லை என்றால், உங்கள் விருப்பப்படி இதனை மாற்றி அமைக்கவும் வசதி தரப்பட்டுள்ளது. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Taskbar buttons என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில், தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். Use small icons என்பதில் கிளிக் செய்தால், டாஸ்க் பார் சிறியதாக அமைக்கப்பட்டு, திரையில் உங்களுக்குச் செயல்பட அதிக இடம் கிடைக்கும்.
2. ஸ்டார்ட் மெனு: விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஸ்டார்ட் மெனு, எக்ஸ்பி சிஸ்டம் தரும் ஸ்டார்ட் மெனுவில் இருந்து வேறுபட்டுள்ளது. ஆனால், இதனைப் பழக்கத்தில் கொண்டு வருவது, கடினமான செயல் இல்லை. நீங்கள் ஸ்டார்ட் பட்டனை அழுத்தும் போதோ அல்லது விண்டோஸ் கீயை அழுத்தும் போதோ, நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைக் காணலாம். இந்த பட்டியல், அடிக்கடி தன்னை அப்டேட் செய்து கொண்டு, பயனுள்ள பல ஷார்ட்கட் வழிகளைத் தரும். உங்களின் ஷார்ட் கட் வழிகளையும் ஸ்டார்ட் மெனுவில் தோன்றும்படி அமைக்கலாம். ஷார்ட் கட் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Pin to Start Menu என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அது ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறும்.
ஸ்டார்ட் மெனுவின் வலது பக்கத்தில், கண்ட்ரோல் பேனல் போன்ற பொதுவான பிரிவுகளை எளிதாக அணுகிப் பெற வழிகள் தரப்படுகின்றன. இங்கு All Programs என்பதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியலைப் பெறலாம்.
புரோகிராம் அல்லது பைல் ஒன்றைத் தேடிப் பெற,ஸ்டார்ட் மெனுவில் காட்டப்படும் தேடல் கட்டத்தில், அதன் பெயரை டைப் செய்திடத் தொடங்கி எண்டர் செய்தால், அவை கிடைக்கும்.
3. யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் (User Account Control (UAC)): யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் என்ற டூல், விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் 7ல் இது மிகவும் மேம்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த டூலைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட அனுமதியை கம்ப்யூட்டர் பயன்படுத்துபவருக்கு வழங்க முடியும். எடுத்துக் காட்டாக, புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கும் போது, UAC கட்டளைப் புள்ளி உங்களின் அனுமதியைக் கேட்டு, அது வழங்கப் பட்ட பின்னரே, புரோகிராமினைப் பதிய அனுமதிக்கும். இது நம் கம்ப்யூட்டருக்குக் கூடுதல் பாதுகாப்பினை வழங்குகிறது. இந்த ஏற்பாடு நமக்குத் தேவையற்ற சிரமம் தராத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் நம்மிடம் இந்த அனுமதியைப் பெறும் UAC கட்டளை பின்னர் அனுமதியைத் தானே வழங்குகிறது.
4. விண்டோஸ் எக்ஸ்புளோரர் (Windows Explorer): விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள, விண்டோஸ் எக்ஸ்புளோரர், மாறுபட்ட தோற்றத்தில் காட்சி அளித்தாலும், செயல்பாடு முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் உள்ளது போலவே இயங்குகிறது. வழக்கமான File/Edit /View மெனு இல்லாமல், இதில் கிடைக்கும் டூல் பார் வேறாகக் காட்சி தருகிறது. இருந்தாலும் மறைக்கப்பட்ட மெனுவினைக் காண, Alt+R அழுத்தினால் போதும். முன்பு விண்டோஸ் சிஸ்டம் காட்டிய File/Edit/View மெனுவும் சேர்த்து காட்டப்படும். இதே செயல் பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிலும் நீங்கள் காணலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில், இடது பிரிவில், முக்கியமான போல்டர்களைப் பெற சுருக்கு வழிகள் தரப்படுகின்றன.
நீங்கள் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்திடும் பைல்கள், Downloads என்ற போல்டரில், மாறா நிலையில் பதியப்பட்டுக் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பினால், பதிவிறக்கம் செய்யப்படும் ஒவ்வொரு முறையும், உங்களிடம் கேட்டு, நீங்கள் குறிப்பிடும் போல்டரில் பதியும் வகையில் அமைக்கலாம்.
இவற்றுடன் Libraries எனப்படும் விர்ச்சுவல் போல்டர்களும் கிடைக்கின்றன. இவற்றில், அனைத்து போல்டர்களும் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் Documentslibraryல், C:\Users\NAME\Documents folder என்ற போல்டருடன், நீங்கள் இணைக்கும் அனைத்து போல்டர்களும் காட்டப்படும்.
உங்கள் தனிப்பட்ட தனி நபர் பைல்களுக்கு C:\Users\NAME என்ற போல்டர் தரப்பட்டுள்ளது. இதில் NAME என்பது, உங்களுடைய யூசர் அக்கவுண்ட் பெயர் ஆகும்.
இந்த விண்டோஸ் எக்ஸ்புளோரரில், கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடுவதற்கான டூல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதற்கான கட்டத்தில் பைலின் பெயரை டைப் செய்து, பைலைத் தேடுமாறு அமைத்து தேடிப் பெறலாம். இதில் தொடர்ந்து தேடுகையில், முந்தைய தேடல்களும் நமக்குப் பட்டியல் இட்டுக் காட்டப்படும்.
விண்டோஸ் எப்போதும், உங்கள் பைல்களின் வரிசைக் குறிப்பு ஒன்றைத் (index) தயாரித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படையில் தேடல் நடைபெறுவதால், தேடல் முடிவுகள் விரைவாகக் கிடைக்கின்றன.
5. கண்ட்ரோல் பேனல் (Control Panel): மாறா நிலையில், கண்ட்ரோல் பேனல், categories மற்றும் links ஆகியவற்றைக் காட்டுகிறது. இருப்பினும், வழக்கமான ஐகான் வகை பட்டியலைக் காண விரும்பினால், மேலாக வலது மூலையில் உள்ள View by optionஎன்பதில் கிளிக் செய்து காணலாம். ஆனால், நீங்கள் தேடுவதைப் பெற, இந்த முயற்சி தேவையே இல்லை. இதிலும் தேடல் கட்டம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தேவையானதை டைப் செய்திடத் தொடங்கியவுடன், பட்டியல் காட்டப்பட்டு, நமக்குத் தேவையானதைப் பெற்று செயல்பட எளிதாக வழி காட்டுகிறது.
கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ் அம்சம் ஒன்றினை, கண்ட்ரோல் பேனல் திறந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. ஸ்டார்ட் மெனுவில், தேடல் கட்டத்தில் நேரடியாக டைப் செய்தும் பெறலாம்.
மேலே காட்டப்பட்டிருப்பவை, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒருவர் அடிக்கடி பயன்படுத்தும் வகைகளாகும்.இன்னும் நிறைய அம்சங்களில், விண்டோஸ் 7 பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை, நாம் விண்டோஸ் எக்ஸ்பியில் பழகிய வகையிலேயே, ஆனால், சிறப்பானவையாகத் தருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தினைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், நாம் அவற்றைப் புரிந்து கொள்வோம்.
நன்றி
Comments