இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் ஒரு பார்வை
AV Test Institute என்ற இந்நிறுவனம் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் செயலிகளை அதன் தரம், செயல்படும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் இயங்கும் முதல் 5 தரமான ஆன்ட்டி வைரஸ் செயலிகள் பட்டியலிட்டுள்ளது.
இந்த செயலிகள் மால்வேர்களை தடுப்பது, வைரஸ் இணையத்தளங்களை சுட்டிக்காட்டுவது, புதிய வைரஸ்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை கம்ப்யூட்டருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பது போன்ற அருமையான செயல்களை செய்யவல்லவை. கட்டணம் கொடுத்துப் பெறப்படும் அனைத்து வசதிகளும் இந்த இலவச ஆன்ட்டி வைரஸ் செயலியில் இருப்பதுதான் அதன் சிறப்பம்சம்.
1. கொமோட ஆன்ட்டி வைரஸ்.
2. இசெட் என்.ஓ.டி. 32
3. பிட் டிபண்டர்
4. பண்டா ஆண்ட்டி வைரஸ்
5. அவிரா
கொமடோ ஆண்ட்டி வைரஸ்
இந்த (Comodo's free antivirus) செயலியைப் பொறுத்தவரை, கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பில் என்ன அம்சங்கள் உள்ளனவோ, அதே அம்சங்கள், இலவசமாகத் தரப்படும் பதிப்பிலும் தரப்பட்டுள்ளன. எனவே, பெரும் பாலோனவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரப்பட்டுள்ள இரு தொழில் நுட்பங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.
அவை, Host Intrusion Prevention System மற்றும் Auto-sandboxing technology ஆகும். இதன் மூலம் இதுவரை அறியப்படாத வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை கம்ப்யூட்டர் சந்திக்கும்போது, அவை கம்ப்யூட்டரைப் பாதிக்காத வகையில் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. அவற்றைச் சந்திக்கையில், மிக வேகமாக இந்த தொழில் நுட்பம் செயல்பட்டு, உடனடியாக, க்ளவ்ட் சேவையில் கிடைக்கும், அண்மைக் காலத்தில் காணப்பட்ட வைரஸ்களுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கிறது. ஒப்பிட்டுப் பார்த்து, சரிபார்க்கப்பட்ட பைல்களை மட்டுமே கம்ப்யூட்டரில் நுழைய அனுமதிக்கிறது. இந்த ஆண்ட்டி வைரஸ் செயலியில் தரப்பட்டுள்ள பயர்வால் பாதுகாப்பும், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த செயலி, விண்டோஸ் இயக்க முறைமையின் விண் 7/8/8,1 மற்றும் விண் 10 ஆகியவற்றில் செயல்படுகிறது. இதனைப் பெற இணைய தளத்தில் https://antivirus.comodo.com/antivirus-for-windows-10/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
இசெட் நோடு 32
பல்வேறு பாதுகாப்பு வளையங்களைக் கொண்டதாக ESET NOD 32 என்ற ஆண்ட்டி வைரஸ் செயலி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். முழுமையான பாதுகாப்பினை, கொஞ்சம் கூடத் தவறு ஏற்படாமல், இது வழங்குகிறது. இதன் பல்வேறு பாதுகாப்பு அம்ச பிரிவுகள் குறிப்பிடத்தக்கவை. வைரஸ்களுக்கு எதிரான செயல்பாடுகளுடன் Antivirus and Antispyware, Antiphishing, Antispam, Network Attack Protection, Botnet Protection, Parental Control, Personal Firewall, Banking and payment Protection, மற்றும் Webcam Protection எனப் பலவகை பாதுகாப்பு வழிகளைப் பல பிரிவுகளாகத் தருகிறது. அந்த வகையில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மிகச் சிறந்ததாகும். இதனைப் பெற இணைய தளத்தில் https://www.eset.com/us/home/antivirus/download/ என்ற முகவரிக்குச் செல்லவும். ஒரு மாத காலம் இதனை இலவசமாக இயக்கிக் கொள்ளலாம். ஓராண்டுக்குப் பெற ரூ. 219 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பிட் டிபண்டர்
தன் ஆண்ட்டி வைரஸ் செயல்பாடுகளுக்காக, அண்மையில் தங்க விருதினைப் பெற்ற செயலி Bitdefender Antivirus. விண்டோஸ் இயக்கத்திற்கு நல்ல துணையாக இது செயல்படுகிறது. 'Behavioral detection' என்று சொல்லப்படும் புதிய தொழில் நுட்பம் ஒன்றை இது பயன்படுத்துகிறது.
இதன் மூலம், வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை அறிந்து நீக்குகிறது. இதனால், வைரஸ் புரோகிராம்கள் செயல்படத் தொடங்கும் முதல் கணத்திலேயே அவை முடக்கப்படுகின்றன. இதனுடைய செயல் பிரிவுகளில் On-demand & on-access virus scanning and removal, active threat control (using an innovative technique called behavioral detection), anti-phishing, anti-fraud features ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதனைப் பெற இணையத்தில் http://www.bitdefender.com/solutions/free.html என்ற முகவரிக்குச் செல்லவும்.
பண்டா ஆண்ட்டி வைரஸ்
விண்டோஸ் இயக்கத்திற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் Panda Anti Virus. இது இயங்க, கம்ப்யூட்டரில் மிகக் குறைந்த அளவான இடமே எடுத்துக் கொள்கிறது என்பது இதன் தனிச் சிறப்பு.
கம்ப்யூட்டர் இயக்கத்தினை, இதன் செயல்பாட்டிற்காகச் சிறிது கூட குறுக்கிடுவதில்லை. க்ளவ்ட் சேவையில் இது அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது. அவ்வப்போது, சிஸ்டம் பைல்களையும், பிரவுசர்களையும் சுத்தப்படுத்தும் கூடுதல் பணியையும் இது மேற்கொள்கிறது. இதனைப் பெற இணைய தளத்தில் http://www.pandasecurity.com/india/homeusers/downloads/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
அவிரா
அவிரா ஆண்ட்டி வைரஸ் (Avira antivirus) ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த ஆய்வு மேற்கொண்ட அமைப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கானதாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலியில், மிகச் சிறப்பாகச் செயலாற்றும் வசதிகளாக இதன் பயர்வால் பாதுகாப்பு வளையம் மற்றும் பெற்றோர் கண்காணிப்பு செயல்பாடு ஆகியவற்றைக் கூறலாம். குறிப்பாக சிறுவர், சிறுமியர்கள், சமூக வலைத் தளங்களைப் பார்வையிடுகையில் கண்காணிக்க இதில் வசதி உள்ளது. https://www.avira.com/ என்ற இணைய தளத்தில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைய தளங்களில் இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில், விண்டோஸ் இயக்கத்திற்கானதை மட்டும் ஆய்வு செய்து மேலே குறிக்கப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் செயலிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை அல்லாது, மேலும் பல செயலிகள் கிடைக்கின்றன. பயனர்கள் தாங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கேற்ப அவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நன்றி : தினமலர் கம்ப்யூட்டர் மலர்
Comments