இந்தியாவிற்கான கூகுள் திட்டங்கள் ஒரு பார்வை..



இணையத்தோடு எங்கும் நிறைந்த ஒன்றாக, கூகுள் செயல்பட்டு வருகிறது. ""இதன் முழுப் பயனை இந்திய மக்கள் அனுபவித்துப் பயன் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என தங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிடுகையில் கூகுள் இந்தியா பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

அதிக எண்ணிக்கையில், தொடர்பில் உள்ள மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தை இந்தியா கொண்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் போன் முதல் இணையதளங்கள் வரை எங்கும் தன் செயல்பாட்டினை விரித்துக் கொண்டு கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்திய டிஜிட்டல் வெளியில், கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்மையில் இவர் உரையாற்றினார்.

1. இணைய இணைப்பில் இன்னும் பலர்:
மொபைல் போன் வழி இணைய இணைப்பினை மேற்கொள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெனப் பயன்படும் ஸ்மார்ட் போன்கள் இந்த ஆண்டில் 7 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு அடுத்தபடியாக, டேப்ளட் பி.சி.க்களின் பயன்பாட்டினை மக்களிடம் அதிகரிக்கச் செய்திட வேண்டும். 2014ல் இது ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. ரூ.10,000 க்கும் குறைவான விலையில் டேப்ளட் பி.சி.க்கள் கிடைக்கும். அதே போல ஸ்மார்ட் போன்களும், அனைவரும் வாங்கும் விலையில் விற்பனைக்கு வரும்.

அடுத்ததாக, இந்தியர்களின் சராசரி வருமானத்தினைக் கணக்கிடுகையில், பிராட்பேண்ட் இணைப்பு, அதிக செலவிடும் இனமாகவே உள்ளது. இதனைக் குறைத்திட கூகுள் நடவடிக்கை எடுக்க உள்ளது. கூடுதலான மக்களை இணைய இணைப்பில், குறிப்பாக, பெண்களைக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள பெண்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்காக இந்த ஆண்டு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2. இணையத்தில் இந்தியப் பதிவுகள் தேவை:
வளமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியையும், கலை மற்றும் பண்பாட்டு வளத்தினையும், சரித்திரத்தினையும் கொண்டது இந்தியா. ஆனால், அவை குறித்த இணையப் பதிவுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன. 

இதற்கு உதவிட கூகுள் Google Art Project என்ற திட்டத்தினை மேற்கொண்டுள்ளது. ASI என்னும் அமைப்புடன் சேர்ந்து, தாஜ்மஹால் போன்ற, இந்திய நினைவுச் சின்னங்களை டிஜிட்டல் உலகில் உருவாக்கும் திட்டமும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது கல்வி கற்கும் சிறுவர்களிடம் அவர்களின் கற்றலில் உறுதுணையாக இருக்கும்.

கூகுள், தற்போது இந்திய மொழிகளுக்கான கீ போர்ட் அமைப்பினை எளிதாக்குவதில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.இந்திய மொழிகளுக்கான உச்சரிப்பினைப் புரிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றும் சாதனங்களையும் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாநில மொழிகளில் எழுத்து வகைகளும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதுவரை பொழுதுபோக்கு தொடர்பான பதிவுகளே, இந்திய இணையத்தில் அதிகம் இருந்த நிலை மாறி வருகிறது. பயனுள்ள தகவல்கள் பதிவது அதிகரித்து வருகிறது. 

3. இணையத்தில் இந்திய வர்த்தக நிறுவனங்கள்:
இந்தியாவில், இணையத்தில் பதிவு செய்யும் தகுதி கொண்ட பல கோடி வர்த்தக நிறுவனங்கள் இயங்கிய போதும், ஏறத்தாழ ஒரு லட்சம் நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கென ஓர் இணையதளத்தினை அமைத்துள்ளன. கூகுள் இதற்கென ஒரு திட்டத்தினைக் கொண்டுவந்தது. 


தொடக்கத்தில் இலவசமாகவும், பின்னர் கட்டணம் செலுத்தியும் வர்த்தக நிறுவனங்கள் தங்களை இணைய தளத்தில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம்.இதன் வழியாகத் தற்போது மேலும் 3 லட்சம் வர்த்தக இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது.

4. மேலே தரப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளும், இந்தியாவை முழுமையான டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற கூகுள் கொண்டுள்ளவையாக உள்ளன. ஒரு கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையை, பத்து கோடியாக உயர்த்த, முன்பு பத்து ஆண்டுகள் ஆயின. 

மூன்று ஆண்டுகளில் இது 20 கோடி ஆயிற்றும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதனை 30 கோடியாக உயர்த்த கூகுள் உறுதி கொண்டுள்ளது. இது 50 அல்லது 60 கோடியாக உயரும்போது தான், இந்தியா இணையம் வழியாக முழுப் பயனையும் பெறும். 

இந்த முயற்சிகளில் ஒன்று பெண்களைத் தனிக் கவனத்துடன் இணையத்தில் கொண்டுவருவதாகும். இது இந்தியாவில் தான் முதன் முதலில் செயல்படுத்தப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS