அவுட்டர்நெட் தரும் இலவச இண்டர்நெட்


நாம் என்றாவது யோசித்திருப்போமா? இன்டர்நெட் ஒன்று இருப்பது போல அவுட்டர்நெட் ஒன்று உண்டா என்று? இல்லை. வேடிக்கைக்குக் கூட இது போல ஒருவர் சொல்லிக் கேட்டதில்லை. 
ஆனால், நியூயார்க் நகரில் இயங்கும் Media Development Investment Fund (MDIF) என்னும் அமைப்பினைச் சேர்ந்த சிலர் இணைந்து "Outernet” என்ற ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். 

இது சிறிய சாட்டலைட்களின் இணைப்பாக உலகெங்கும் அமைக்கப்படும். இதன் பணி? இன்டர்நெட் வழி கிடைக்கும் டேட்டாவினை இலவசமாக, இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பெறும் வகையில் தருவதே இந்த கட்டமைப்பின் பணியாக இருக்கும். 

எந்த இடம் என்றில்லாமல், உலகில் வாழும் அனைவருக்கும், எந்தவித தடையும் இன்றி, வடிகட்டல் இன்றி, அனைத்து இணைய டேட்டாவும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். அதுவும் இலவசமாகவே அனைவருக்கும் இந்த இணைப்பு கிடைக்கும். 

இன்டர்நெட் வேகமாக வளர்ந்து, நம் வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக மாறிவிட்டது. எனவே, மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்பினர், உணவு, உடை, வாழ இடம் ஆகியவற்றை அடுத்து, இன்டர்நெட் இணைப்பினையும் மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதுகின்றன. 

எனவே, இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்தக் கூடாது, சிலவகை இணைப்பினைத் தடை செய்திட வேண்டும் என முயற்சிக்கும் அரசுகளுக்கு இந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். அடிப்படை மனித உரிமை இது போன்ற அரசு அமைப்புகளால் மீறப்படுகின்றன என்று கருதுகின்றனர்.

எனவே, இந்த குழுவினர், பல நூற்றுக் கணக்கான அளவில் சிறிய சாட்டலைட்களை உலகெங்கும் பறக்கவிட இருக்கின்றனர். 

இவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் வழியாக, எவரும் இணைப்பு பெற்று, இணையத் தகவல்களைப் பெறலாம். இந்த சாட்டலைட்களுக்குத் தகவல்களை அனுப்ப தரையில் இயங்கும் நூற்றுக் கணக்கான மையங்கள் அமைக்கப்படும்.

MDIF அமைப்பைப் பொறுத்தவரை, இந்த உலகில் இன்னும் 40 சதவீதம் பேர், இணைய இணைப்பினைப் பெற முடியாமலே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் வட கொரியா போல தடை போடும் அரசுகள் மட்டும் அல்ல; உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்குவதில் ஏற்படும் பெருத்த செலவும் ஒரு காரணமாகும்.

அவுட்டர் நெட் (Outernet) மூலம் சைபீரியா அல்லது மேற்கு அமெரிக்காவில் உள்ள தொலை தூர தீவுகளில், கிராமங்களில் வாழும் மக்கள், நியூயார்க், டில்லி, டோக்கியோவில் வாழும் மக்களைப் போலவே, இணைய இணைப்பினைப் பெற்று, தகவல்களை அடைய முடியும். அனைவருக்கும் இந்த உரிமை சமமாய் கிடைக்கும். 

கீழே தரையில் இயங்கும் நிலையங்களில் இருந்து தகவல்கள் சிறிய சாட்டலைட்களுக்கு அனுப்பப்படும். இந்த சாட்டலைட்கள், பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பினையும், அதன் வழி தகவல்களையும் தரும்.

இந்த கட்டமைப்பினை அமைக்க 3 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. MDIF அமைப்பு இதற்கான நிதியைத் திரட்டி வருகிறது.போதுமான நிதி கிடைத்தவுடன், அவுட்டர்நெட் திட்டம் அமைக்கப்படும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க