விண்டோஸ் 8 மாற மைக்ரோசாப்ட் கட்டாயம்
விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுவது வரும் அக்டோபார் 31 உடன் முடிந்துவிடும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பேசிக், ஹோம் பிரிமியம் அல்லது அல்ட்டிமேட் ஆகிய அனைத்து வகைசிஸ்டங்களுடனும் இந்த நாளுக்குப் பின்னர், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்கக் கூடாது.
பொதுவாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தினால், ஓராண்டு கழித்து, அதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மூடுவிழா நடத்தும். பழைய விண்டோஸ் சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கக் கூடாது எனக் கட்டாயப்படுத்தும். இப்போது, விண்டோஸ் 8 அறிமுகப்படுத்தப்பட்டு, ஓராண்டுக்கு மேல் காலம் ஆகிவிட்டதால், இந்த முடிவினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மேலும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன் நிறுவன வரலாற்றில் மிகச் சிறந்த படைப்பு என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது. எனவே, மக்கள் அதனை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், அதில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அதனை எப்படியாவது, மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கிறது. அதன் ஒரு நிலை தான், விண்டோஸ் 7 குறித்த இந்த அறிவிப்பு.
சென்ற ஆண்டும் இதே அக்டோபர் 31 நாளினை இறுதி நாளாக அறிவித்தது. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட, கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், இதனைக் கடுமையாக எதிர்த்ததால், உடனே அந்த அறிவிப்பினை வாபஸ் பெற்றது.
பொதுவாக, ஓராண்டுக்கு முன்னரே எச்சரிக்கை தரப்பட வேண்டும் என்பதால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திடும், எச்.பி., டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் பிப்ரவரி 15, 2015 வரை காலக்கெடு தந்துள்ளது.
நன்றி
Comments