இணையத்தில் இலவசமாக உங்கள் வர்த்தகம்
கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்திய வர்த்தகர்களை, தங்கள் செயல்பாட்டினை இணையம் வழியே மேற்கொள்ளுமாறு அழைத்துள்ளது.
இந்த வகையில், 2014 ஆம் ஆண்டுக்குள், குஜராத் மாநிலத்தில், 50,000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு வர, இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கென,இலவச இணைய தளங்களை வழங்குகிறது. வணிகத் தளங்களை, இணையத்தில் அமைத்திடும் செயல்பாட்டில், தொழில் நுட்ப ரீதியாக உதவி செய்திட, குஜராத்தில் 200க்கு மேற்பட்ட கூகுள் பொறியாளர்கள் செயல்படுவார்கள்.
இந்த நிறுவனங்கள், கூகுள் மேப்பிலும் மக்கள் அறியும் வகையில் இடம் பெறும். இவை அனைத்தும் முதல் ஆண்டுக்கு முற்றிலும் இலவசமே. பின்னர், இந்த நிறுவனங்கள், தாங்கள் விரும்பினால், கூகுள் நிறுவனத்திடமே தொடர்ந்து இந்த சேவையைப் பெறலாம்.
இதற்கு மாதம் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அல்லது வேறு நிறுவனங்களின் சர்வர்களில், தங்கள் வர்த்தக நிறுவன இணைய தளத்தை அமைக்கலாம்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், இணையம் வழி வர்த்தகத்தை மேற்கொள்வதில், மிகச் சில நிறுவனங்களே, ஆர்வம் காட்டி வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் தான், அதிக எண்ணிக்கையில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை, இணையத்தில், வர்த்தக செயல்பாட்டினை மேற்கொள்ளும் பட்சத்தில், இவற்றின் வர்த்தக வாய்ப்புகள் பெரிய அளவில் விரியும் வாய்ப்புகள் உள்ளன.
புதிய விற்பனைச் சந்தையினை இவை பெற முடியும். மொத்த வருமானம் 51 சதவீதம் உயரும். கூடுதல் லாபம் 49 சதவீதம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 15 கோடி இணையப் பயனாளர்களில், பத்து சதவீதம் பேர், குஜராத் மாநிலத்தில் உள்ளனர்.
Comments