இந்திய மொபைல் சந்தையில் களமிறங்கும் கூகுள்
இந்திய மொபைல் போன் சந்தையை இலக்காக்க் கொண்டு கூகுள் அதிரடியாக இதில் இறங்கத் தயாராகி வருகிறது. சென்ற சில ஆண்டுகளாக, இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் விற்பனையும் பயன்பாடும் இந்தியாவில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தொழில் நுட்ப ரீதியாகவும், இந்த சிஸ்டத்தில் கிடைக்கும் வசதிகள், வாடிக்கையாளர்களின் மனங்களைக் கவர்ந்து வருகின்றன.
எனவே, இதன் அடிப்படையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்களை வடிவமைக்க, இந்திய மொபைல்போன் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கென சுமார் 100 கோடி டாலர் திட்டச் செலவில், பெரிய திட்டம் ஒன்றினை செயல்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. ”இதற்கு ஆண்ட்ராய்ட் ஒன்” (Android One) எனப் பெயருட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்பன், ஸ்பைஸ், செல்கான், இண்டெக்ஸ் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ரூ.6,000க்குள்ளான விலையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
குறைந்த விலை கட்டுப்படியாகும் அளவில் போன்களைத் தயாரிக்க கூகுள் தொழில் நுட்ப உதவிகளை அளித்திடும். இந்தியாவில், மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவன்ங்கள் இணைந்து, ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் 25 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன. சாம்சங் 35% பங்கினைக் கொண்டுள்ளது. விலையைக் குறைப்பதனால், சாதாரண வசதிகள் கொண்ட போன்களைப் பயன்படுத்துவதில் இருந்து, மக்கள் ஸ்மார்ட் போனுக்கு மாறுவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.
Comments