பேஸ்புக்கை பற்றி நாம் உணர வேண்டியவை



கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது. நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது. 

இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம்.

நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் பெற வேண்டும். நாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த உணர்வு நமக்கு அனைத்து வயதிலும் ஏற்படுகிறது. இந்த எண்ணத்திற்கான வடிகாலை பேஸ்புக் நமக்குத் தருகிறது. இதனால் தான், பேஸ்புக்கினை விட்டு விலகி இருப்போம் என்று திட்டமிடுபவர்கள் கூட, ஒரு நாளைக்கு மேல் விலகி இருக்காமல், மீண்டும் திரும்புகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சி மற்றும் துக்கம் தரும் பேஸ்புக்: அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்போர், மகிழ்ச்சிக்குப் பதிலாக துக்கமே அடைகின்றனர். ஏனென்றால், மற்றவர்கள் அளவிற்கு நாம் பிரபலம் ஆகவில்லையே என்ற கவலைதான். சிறுவன் ஒருவன் தன்னை ஒத்த வயதுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செல்கிறான். ஆனால், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, தன் நண்பனை மற்றவர்கள் தொடர்ந்து வாழ்த்தி, பரிசுகளை வழங்கும்போது, பொறாமைக் குணம் அவனிடம் ஏற்படும். மகிழ்ச்சி சற்று குறையும். இன்னொருவருடைய வாழ்க்கை தன்னுடையதைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது என்ற பொறாமை அல்லது ஆற்றாமை ஒவ்வொருவருக்கும் பல நேரங்களில் ஏற்படுகிறது. பேஸ்புக்கில் இருக்கும்போது இது அதிகமாகவே ஏற்படுகிறது.

இந்த கருத்தினை சிலர் மறுக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது,பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. பேஸ்புக் பெரும்பாலான நேரங்களில், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளையும் தருகிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களைக் காட்டிலும், இவற்றைப் பயன்படுத்துவோர், ஏறத்தாழ 54% பேர், மகிழ்ச்சியாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, நம் எண்ணங்களைச் சீரமைக்கவும், வாழ்க்கையில் முன்னேற்றமடையும் வழிகளைத் தருவதிலும், பேஸ்புக் இயங்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

தன்னைத்தானே ரசிக்கும் தன்மை: தன்னைத்தானே பார்த்துக் கொண்டு, தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குணம் பலரிடம் இருக்கிறது. மற்றவர்களிடம் சிறிதளவாவது உள்ளது. இவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை பேஸ்புக் தருகிறது. வழிகளையும் அமைத்து வழங்குகிறது.

ஒதுங்க நினைப்பவர்களுக்கு இடம்: மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றாமல் ஒதுங்குபவர்களுக்கு, ஒரு சமுதாயத்தினைத் தரும் வழிகளை பேஸ்புக் கொண்டுள்ளது. சமுதாயத்தினைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்க எண்ணுபவர்கள், இங்கு தங்களுக்குப் பிடித்த நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

உள்முகச் சிந்தனை: நம்மில் பலரும் உள்முகச் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்று உளவியலாளர்கள் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களில் சிலர் ஒத்துக் கொள்வார்கள். பலர் இல்லவே இல்லை என சாதிப்பார்கள். இந்த குணம் பேஸ்புக்கில் நம் பதிவுகளில் அதிகம் வெளிப்படுகிறது. இந்த வடிகால், அவர்களின் மனதைச் சாந்தப்படுத்தி, வெற்றி பெற்று விட்டதாக எண்ண வைக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் நல்லதொரு சேவையினை வழங்குகிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலே சொன்ன கருத்துக்களைக் காட்டிலும், இன்னும் பல வழிகளில் பேஸ்புக் நம் வாழ்வோடு இணைந்ததாகவே உள்ளது. இணையம் பக்கமே வராமல், பேஸ்புக் அல்லது அது போன்ற சமுதாய தளங்கள் குறித்து தெரியாமல், வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?