இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு எச்சரிக்கை


அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது.

இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை US Computer Emergency Readiness Team என்ற அமைப்பு வழங்கி வருகிறது.

பிரிட்டனிலும் இதே அமைப்பு இயங்கி வருகிறது. பொதுவாக, பிரவுசர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளில், இந்த அமைப்புகள் எதுவும் சொல்வதில்லை. பிரவுசர் பயன்பாடு குறித்து முதல் முதலாக இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பினை இரண்டு அமைப்புகளும் வழங்கியுள்ளன.

இந்த பிழை குறியீடு என்னவென்று இன்னும் அறியப்படாததால், இதனை zeroday exploit எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் வழியாக, ஹேக்கர்கள் எளிதாகக் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டர்களில் பயனாளர்களின் அனுமதியின்றி அமைத்துவிடலாம்.

இந்த புரோகிராம்கள் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுடன், நாம் இணையத்தில் காணும் தளங்கள், அவற்றின் தன்மைகள் ஆகியன குறித்தும் தகவல்களைச் சேகரித்து, இந்த புரோகிராம்களை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அல்லது நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே அடுத்தவருக்குக் கொண்டு செல்லும் வகையில் செயல்படும்.

முதன் முதலாக, இந்த பிழைக் குறியீடு இருப்பதனை FireEye என்ற இணைய பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்தது. வழக்கம் போல ப்ளாஷ் (Flash) அடிப்படையில் இயங்கும் புரோகிராம்கள் மூலமாக இது இயங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகள் 9,10 மற்றும் 11 ஆகியவற்றில் தான் இந்த பிழைக் குறியீடு உள்ளது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் தான் இவை இயங்குகின்றன என்றாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6லிருந்தே இந்த பிழைக் குறியீடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகங்களின் தகவல்களைத் திருடும் நோக்கில் ஹேக்கர்கள் இந்த பிழைக் குறியீட்டினை முதலில் பயன்படுத்தினர் என்றும், தற்போது இது பரவலாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், அதன் ப்ளாஷ் ப்ளக் இன் அப்ளிகேஷன் புரோகிராமினைச் செயல் இழக்கச் செய்துவிட்டு பயன்படுத்துமாறு FireEye அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பாதுகாப்புடன் இயக்க Microsoft's Enhanced Mitigation Experience Toolkit security app என்ற ஒரு புரோகிராமினையும் தருகிறது. ஆனால், பாதுகாப்பான இணைய உலா மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், பிரவுசரை மாற்றிக் கொண்டு, இன் டர்நெட் எக்ஸ்புளோரரைத் தவிர்ப்பதே நல்லது என அனைத்து இணைய பாதுகாப்பு வழங்குவதில் பணியாற்றும் வல்லுநர்களும் அறிவித்துள்ளனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை எத்தனை பேர் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில், இதனைக் கண்காணிக்கும் அமைப்புகள் வழங்கும் புள்ளி விபரங்களில், வேறுபாடுகள் உள்ளன. NetMarketShare என்னும் அமைப்பு, டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில், 55 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், StatCounter இதனை 22.58% என அறிவித்துள்ளது. இந்த புள்ளி விபரங்களில் பலத்த வேறுபாடு இருந்தாலும், பயனாளர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையான தகவலாகும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?