மொபைல் புரட்சி..!
சென்ற 2013 ஆம் ஆண்டில் நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன.
பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன.
நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.
சென்ற மாதம், டில்லியில், ஒரு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, பூமியை வலம் வரும் சாட்டலைட்களுடன் தொடர்பு கொண்டு, தான் செல்ல வேண்டிய திருமண மண்டபத்திற்குச் சரியான வழியில் ஒருவர் சென்றார் என்ற செய்தி வெளியானது. ஒரு டாக்சி ட்ரைவர் கூட, சாலையில் செல்பவர்களைக் கேட்டே, வழியை அறிவார். ஆனால், சரியாக இயக்கினால், ஒரு ஸ்மார்ட் போன் சிறப்பாக வழியைக் காட்டுகிறது.
கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், 2013 ஆம் ஆண்டில் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.
கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன -- தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 8 கோடியே 20 லட்சம் பேரில், 6 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் 19 கோடியே 80 லட்சம் பேரில், 89 சதவீதத்தினர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.
டில்லியில், ஜெய்சல் கவுரவ் என்னும் 16 வயது பள்ளி மாணவி, தான் தொடர்ந்து தினந்தோறும், மற்ற தோழிகளுடன் உரையாடுவது, தகவல்களை, ஜோக்குகளை, படங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், யு ட்யூப் வீடியோ காட்சிகளைக் கண்டு களித்தல் மற்றும் பேஸ்புக் செய்திகளை அமைத்து அனுப்புதல் போன்ற வற்றை, மொபைல் போன் வழியாகவே மேற்கொள்வதாகப் பெருமையுடன் கூறி உள்ளார்.
இவை மட்டுமின்றி, தன் வகுப்பு பாடங்கள் குறித்த பாடங்களை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கிக் கொள்ளுதலையும் மொபைல் போன் வழியாக மேற்கொள்வதாகவும் ஜெய்சல் தெரிவித்துள்ளார்.
நன்றி
Comments