நூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள்..!
நடப்பு ஆண்டில், ஆண்ட்ராய்ட் இயக்கம் கொண்ட சாதனங்களின் விற்பனை நூறு கோடியைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஆப்பிள் ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் கொண்ட சாதனங்களின் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் சாதனங்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கார்ட்னர் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்கள் விற்பனை 7.6% அதிகரித்து, 247 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும். இவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்.
கூகுளின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அதிகமாகப் பரவலாகப் பயன்படுத்தும் சிஸ்டமாக இந்த ஆண்டும் இடம் பெறும். விலை மலிவான ஸ்மார்ட் போன்களின் விற்பனை இந்த நிலைக்கு அடித்தளம் அமைக்கும்.
இந்த ஆண்டில், நூறு கோடி சாதனங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், 75% ஆண்ட்ராய்ட் சாதன விற்பனை வளரும் நாடுகளிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான சாதனங்களின் விற்பனையைக் கணக்கிடுகையில், விண்டோஸ் இயங்கும் சாதனங்களின் கூடுதல் 10%, ஐ.ஓ.எஸ். 29%, ஆண்ட்ராய்ட் 25.6% என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் சிஸ்டம் மூலம் மற்ற நிறுவனங்களுடனான போட்டியில், மைக்ரோசாப்ட் இந்த ஆண்டில் தொடர்ந்து போராடும். 2012 ஆம் ஆண்டில் 34 கோடியே 63 லட்சம் சாதனங்களிலும், 2013ல், 32 கோடியே 80 லட்சம் சாதனங்களிலும் விண்டோஸ் இருந்தது. இந்த 2014ல், இது 35 கோடியே 99 லட்சமாக இருக்கும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சிஸ்டம் எதிர்பார்த்த இலக்குகளை சென்ற ஆண்டு எட்டவில்லை. மிகப் பிரமாதமாக மக்களால் விரும்பப்படும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலையில், போன் தயாரிப்பவர்களின் ஒத்துழையாமை மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பரவல், இதன் இலக்குகளைத் தகர்த்தது.
ஆனால், 2013ன் இறுதி மாதங்களில், நோக்கியா தன் விண்டோஸ் போன்களின் விற்பனையில், மிகப் பிரமாதமான முன்னேற்றத்தினைக் காட்டியது.
இந்த ஆண்டில் நோக்கியாவைக் கைப்பற்றி இயக்க இருக்கும் மைக்ரோசாப்ட், இந்த நிலையைத் தொடர்ந்து உயர வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினைப் பரவலாக்கும் என கார்ட்னர் நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்றி
Comments