இந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்
அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் சமூக இணைய தள நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது.
மொபைல் தொழில் நுட்பத்துறையில் இயங்கும், பெங்களூருவினைச் சேர்ந்த Little Eye Labs என்னும் நிறுவனத்தை அண்மையில் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் திறனை அதிகப்படுத்தும் தொழில் நுட்பத்தினை வடிவமைத்து வருகிறது.
இந்த தொழில் நுட்பத்திற்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுத்து வந்தது. தன் வர்த்தகத்திற்கு இதன் கட்டமைப்பு தேவையாய் இருந்தது. எனவே, தற்போது இந்த நிறுவனத்தையே வாங்கி உள்ளது. முதல் முறையாக, ஓர் இந்திய நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன விலை இதற்கெனக் கொடுக்கப்பட்டது என இரண்டு பக்கம் இருந்தும் தகவல் இல்லை. லிட்டில் ஐ நிறுவன வல்லுநர்கள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 10 பேர்கள் தான். இருப்பினும், இந்த நிறுவனம் 1.5 கோடி டாலர் விலை போயிருக்கலாம் என சாப்ட்வேர் நிறுவனங்கள் பேசிக் கொள்கின்றன.
பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தியே அணுகுகின்றனர் என்பதாலேயே, பேஸ்புக்கிற்கு இந்த தொழில் நுட்பம் தேவையாய் உள்ளது. பயனுள்ள மொபைல் அப்ளிகேஷன்களை பேஸ்புக் தன் பயனாளர்களுக்குத் தரத் திட்டமிடுகிறது.
அந்த வகையில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் பக்க பலமாக இருக்கும் என பேஸ்புக் நிறுவன பொறியியல் மேலாளர் சுப்பு சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பிரிவுகளைத் தொடங்கி தங்களுக்கு வேண்டிய தொழில் நுட்பத்தினைத் தயாரித்து வரும் வேளையில், பேஸ்புக் இந்திய தகவல் தொழில் நுட்ப திறமையின் மதிப்புணர்ந்து, நிறுவனத்தையே வாங்கியுள்ளது, நம் திறமைக்குச் சான்றாகும்.
நூறு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தும் பேஸ்புக் இணைய தளப் பயனாளர்களுக்கு இந்த தொழில் நுட்பம் மூலம் பல புதிய வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். லிட்டில் ஐ லேப்ஸ் என்ற இந்த தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கி ஓராண்டு தான் ஆகியுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
இந்நிறுவனத் தின் அனைத்து பொறியியல் வல்லுநர்களும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடமான மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்குச் செல்ல இருக்கின்றனர். அங்கு கிடைக்கும் உலகத் தரத்திலான தொழில் நுட்பக் கட்டமைப்பு, இன்னும் சிறப்பாகச் செயல்பட வழி வகுக்கும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி
Comments