நொடியில் மொபைல் ரீசார்ஜ்
அண்மையில்
இன்டெல் நிறுவனம், இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு உதவித் தொகை வழங்கியபோது,
ஒருவரின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இன்றைய
சூழ்நிலையில், நாம் பல டிஜிட்டல் சாதனங்களை, அவ்வப்போது சார்ஜ் செய்திட
வேண்டியுள்ளது. இதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாவதால், நம் வேலை
நேரம் பாதிக்கப்படுகிறது.
இதனைப் பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு, 18 வயதே நிரம்பிய, கலிபோர்னியாவில்
லின்புரூக் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஈஷா கரே என்னும் மாணவி, புதிய
கண்டுபிடிப்பாக சாதனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இதனைப் பயன்படுத்தி, மொபைல் போன் உட்பட, எந்த டிஜிட்டல் சாதனத்தையும் 20 நொடிகளில் சார்ஜ் செய்துவிடலாம்.
ஒரு சிறிய சூப்பர் கெபாசிட்டர் ஒன்றை இவர் வடிவமைத்துள்ளார். இதனை செல்
போன் பேட்டரி ஒன்றின் உள்ளாக பதித்துவிடலாம். இதன் மூலம், மிக மிக வேகமாக,
மின் சக்தி பேட்டரிக்குச் செல்கிறது. இதனால் 20 முதல் 30 நொடிகளில்,
பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது.
வழக்கமாக ரீ சார்ஜ் செய்யப்படும் பேட்டரிகள், ஏறத்தாழ ஆயிரம் முறை ரீசார்ஜ்
செய்தவுடன் தங்களின் திறனை இழந்துவிடுகின்றன. ஆனால், ஈஷா கரே
வடிவமைத்துள்ள கெபாசிட்டர், பத்தாயிரம் முறைக்கும் மேலாக, சார்ஜ் செய்வதனை
அனுமதிக்கிறது.
ஈஷா கரே சிறப்பு அனுமதி பெற்று, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின்,
கெமிஸ்ட்ரி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி சோதனைச் சாலையில் இந்த ஆய்வினை
மேற்கொண்டார். இவர் வடிவமைத்துள்ள இந்த சாதனம், நெகிழ்வாக இருப்பதனால்,
சுருட்டி எடுத்துச் செல்லவும் வழி தருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இன்டெல் நிறுவனம், இரண்டு இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு
விருதினை வழங்கி உயர் நிலை ஆய்வுக்கு வழி அமைக்கிறது. அந்த வகையில், ஈஷா
கரே 50 ஆயிரம் டாலர் பரிசாகப் பெறுகிறார். அத்துடன் ஹார்வேர்ட் பல்கலையில்
தன் ஆய்வினைத் தொடர இருக்கிறார்.
நம் வாழ்க்கை முறையை மாற்ற இருக்கும் இது போன்ற கண்டுபிடிப்புகள், தகவல் தொழில் நுட்பத்தின் சரித்திரத்தில் நிச்சயம் இடம் பெறும்.
Comments