Technologies அன்று முதல் இன்றுவரை ஒரு பார்வை.........

பொதுவாக, ஒரு தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், அது மேம்பாடு அடையும் பொழுது, புதிய தொழில் நுட்பம் அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். பத்து அல்லது இருபது ஆண்டுகள் மட்டுமே, எந்த தொழில் நுட்பமும் பயன்பாட்டில் இருக்கும்.


பின்னர், பழையதாகி, பயன்பாட்டிற்கு வேகமற்றதாக ஒதுக்கப்படும். திரைப்படம், தொலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி பெட்டி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சாதனங்களில் இயங்கும் தொழில் நுட்பங்கள் இதற்கு சாட்சியாகும்.


கம்ப்யூட்டர் உலகில் இயங்கும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், அறிமுகப் படுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னும் பல அடிப்படைத் தொழில் நுட்பங்கள், உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்காவது இவை சிறந்த பயன்பாட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.



கம்ப்யூட்டர் உலகில் மறைந்த தொழில் நுட்பங்களும் உண்டு. போர்ட்ரான், எம்.எஸ். டாஸ், நெட்வேர், லோட்டஸ் 1-2-3 என சிலவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் சில இன்னும் மறையாமல் இயங்கி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.



1. கோபால் 1960 (COBOL): அரசும், தொழிற்பிரிவும் இணைந்து, ஓர் அமைப்பை உருவாக்கி, கோபால் மொழியை (Common Business Oriented Language) உருவாக்கின. நிதி மற்றும் அரசு இயக்கங்களுக்கு இதுவே இன்றும் அடிப்படை மொழி அமைப்பாக இயங்கி வருகிறது.


தொழிற்சாலை மற்றும் அரசு நிர்வாகம், நிறுவன அமைப்பின் இயக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்பாக இதுவே இன்றும் இயங்கி வருகிறது.



2. விர்ச்சுவல் மெமரி (Virtual Memory) 1962: மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில், சில அறிவியல் வல்லுநர்கள் இணைந்து திட்டம் ஒன்றில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், தங்கள் வசதிக்காக, விர்ச்சுவல் மெமரி என்னும் தொழில் நுட்பத்தினை உருவாக்கினார்கள்.


கம்ப்யூட்டர் அவற்றை இயக்குபவர் களுக்கும், புரோகிராம்களுக்கும் இடையே இயங்குகையில், தன் நினைவக இடத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில், இந்த விர்ச்சுவல் மெமரி கண்டுபிடிப்பு, பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் தான், நேரத்தைப் பகிர்ந்து கம்ப்யூட்டர் வேலைகளை மேற்கொள்ளும் முறையும் உருவானது.



3. ஆஸ்க்கி (ASCII) 1963: ஆங்கில மொழி எழுத்துக்கள், எண்கள் மற்றும் சில உரு அடையாளங்கள் கம்ப்யூட்டரில் காட்டப் பட வேண்டிய வழிமுறையே ஆஸ்க்கி – American Standard Code for Information Interchange – எனப்படும் கட்டமைப்பு ஆகும். 1963 ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டது. 128 கேரக்டர் குறியீட்டிற்கு முதலில் உருவாக்கப்பட்டுப் பின்னர் 256 கேரக்டர் குறியீட்டிற்கு உயர்த்தப்பட்டு, பல புதிய அடையாள உருக்களையும் சேர்த்துக் கொண்டது.


1988ல் யூனிகோட் தொழில் நுட்பம் உருவானாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்பாக இன்னும் ஆஸ்க்கி தான் இருந்து வருகிறது.



4. ஓ.டி.எல்.பி. (OTLPonline transaction processing) 1964: ஐ.பி.எம். நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். ஆன்லைன் மூலமாக நிதி பரிவர்த்தனைக்கென உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கென, பயணிகள் முன்பதிவினை மேற்கொள்ள இது முதலில் உருவாக்கப்பட்டது. அப்போது தொலைபேசி வழியாக, ஏறத்தாழ 2,000 டெர்மினல்கள், ஐ.பி.எம். 5070 என்ற இரு கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்டு இந்த சிஸ்டம் செயல்படுத்தப்பட்டது.


சில நொடிகளில் முன்பதிவு ஏற்படுத்தப்பட்ட போது, அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இன்றைக்கு விமான நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மின்னணு வழியிலான வர்த்தக முறைகள் அனைத்திற்கும் இதுவே அடிப்படைக் கட்டமைப்பாக இயங்குகிறது.



5. ஐ.பி.எம். சிஸ்டம் /360 மெயின் பிரேம் (IBM System 360 Mainframe)1964: முதன் முதலில் ஐ.பி.எம். நிறுவனம் மெயின் பிரேம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை வடிவமைத்த போது 500 கோடி டாலர் செலவானது. ஒத்திசைவான ஆறு கம்ப்யூட்டர்கள் மற்றும் 40 துணை சாதனங்கள் இணைந்து இது உருவாக்கப்பட்டது. பின் வர்த்தக ரீதியாகத் தொடங்கிய போது, ஆண்டுக்கு 10,000 மெயின் பிரேம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்தது. இப்போது அமைக்கப்படும் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களிலும் System 360கட்டமைப்புதான் அடிப்படைக் கட்டமைப்பாக உள்ளது.



6. எம்.ஓ.எஸ். சிப் (MOS Chip) 1967:
MOS (Metal Oxide Semi Conductor) என அழைக்கப்படும் மெட்டல் - ஆக்ஸைட் செமி கண்டக்டர் தொழில் நுட்பம் தான் இன்றும் கம்ப்யூட்டர் சிப் உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுகிறது. இன்று இதனை CMOS Complementary Metal Oxide Semi Conductor என அழைக்கின்றனர். முதன் முதலில் உருவான பேர் சைல்ட் சி.பி.யு. தொடக்கத்தில் 8 பிட் அளவில் இயங்கியது.



7. சி மொழி (C Programming Language) 1969:
பெல் லேப்ஸைச் சேர்ந்த டெனிஸ் ரிட்சி (Dennis Ritchie), அப்போது வந்த புதிய யூனிக்ஸ் சிஸ்டத்தில் இயக்க "சி' புரோகிராமிங் மொழியை உருவாக்கினார். உலகில் மிகப் பிரபலமான கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியாக இன்றும் சி மொழிதான் உள்ளது. இந்த அமைப்பிலிருந்து பல வகையான சி மொழிகள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.



8.யூனிக்ஸ் (UNIX) 1969:
மினி கம்ப்யூட்டர் களில் பயன்படுத்த, ஒரே ப்ராசசரில், பலர் இயக்குவதற்குத் தேவையான கட்டமைப் பை வழங்கும் வகையில் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, பெல் லேப்ஸைச் சேர்ந்த கென்னத் தாம்ப்ஸன் மற்றும் டெனிஸ் ரிட்சி உருவாக்கினார்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, பலர் ஒரே நேரத்தில் பைல்களைப் பகிர்ந்து, பலவகையான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப் பட்டது.



9. எப்.டி.பி. (FTP File Transfer Protocol) 1971: எம்.ஐ.டி.யில் பயின்ற மாணவர் அபே பூஷான் (Abhay Bhushan) FTP என அழைக்கப் படும் பைல் மாற்றும் வழிமுறையை உருவாக்கினார். முதலில் இது RFC 114 Draft Standard என அழைக்கப்பட்டது. அவரே பின் நாளில், மின்னஞ்சல் அனுப்பிப் பெறுவதற்கான வழிமுறைகளையும் உருவாக்கினார்.


இவர் உருவாக்கிய வழிமுறை, ARPAnet பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்பட்டு பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1984ல் இதன் முன்னேறிய வழிமுறையாக TCP/IP புரோட்டோகால் உருவானது. இன்டர்நெட் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான நெட்வொர்க்கில் பயன் படுத்தப்படும் வழிமுறையாகத் தொடர்ந்து இது பயன்பாட்டில் உள்ளது.



10. சி ப்ளஸ் ப்ளஸ் (C ++) 1985:
ஆய்வு மையத்தில், ஸ்ட்ரூஸ்ட்ரப் (Bjarne Stroustrup) சி ப்ளஸ் ப்ளஸ் புரோகிராமிங் மொழி குறித்த நூலை வெளியிட்ட போது, அது ஆப்ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங் வழிமுறையினை முன்னுக்குக் கொண்டு வந்தது. இதுவே இன்றைய நடைமுறையில் உள்ள பல குறியீடுகளுக்கு அடிப்படையாய் அமைந்தது.

இதே போல, இன்னும் பல தொழில் நுட்பங்கள் கம்ப்யூட்டர் உலகில் கோலூன்றி கொண்டு இருக்கலாம். அவற்றின் இடத்தில் நம் தேவைகளுக்கேற்ப புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலே அவை மறைந்து போகும். அதுவரை இவற்றின் திறன் கூடிக் கொண்டு இருக்கும்.


Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க