பேஸ்புக் வழங்கும் புத்தம் புது விருதுகள்
அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க், இந்தியாவில் இணைய மேம்பாட்டிற்கென 10 லட்சம் டாலர் மதிப்பிலான உதவி அளிப்பதாக அறிவித்தார். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புலம் மாறும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் உதவிடும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், இணைய தளங்கள், இணையம் வழி சேவை ஆகியவற்றைக் கொண்டு வருவதில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய இணைப்பு தரும் சக்தியும் திறனும் குறித்து விரிவாகப் பேசிய மார்க், தொழில் நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலரின் தனி உரிமையாக இருக்கக் கூடாது. அது நம் சமுதாயம் அனைத்திற்கும் நன்மை தரும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியா ஏற்கனவே அறிவியல், ஆய்வு மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல இணையத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே, இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையத்திலும், 10 கோடி பேர் பேஸ்புக்கிலும் இருந்தாலும், இன்னும் நூறு கோடிப் பேருக்கு மேல், இணைய இணைப்பின்றி உள்ளனர் என்றார். இந்திய ஜனத்தொகையில் இன்னும் 69% பேர் இணையத்தைப் பயன்படுத்தாதவராக உள்ளனர். ஏன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும்? மற்றும் இணையம் என்ன பயன்களைத் தரும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாதவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களை இணையம் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். இணையம் தரக்கூடிய பயன்களின் மதிப்பை இவர்கள் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில், மொபைல் சாதனங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று, அனைத்து மக்களையும் இணைத்துள்ளது. எனவே, அவற்றின் வழியாகவே அவர்களை இணையத்திலும் இணைக்கலாம்.
அண்மையில் மெக்கின்சி நிறுவனம் வெளியிட்ட அதன் அறிக்கையில், இணையத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு, அவர்கள் மொழிகளில் இணையம் இல்லாததே முதன்மைக் காரணமாகும். இணையம் வழி சேவையும் இவர்களுக்கு அவர்களின் மொழியில் கிடைப்பதில்லை. இதுவே, இணையத்தை, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியதாக்கிவிடுகிறது. இந்த இணைய இடைவெளியைப் போக்க, பேஸ்புக் கிராமப் புறங்களில் இணைய இணைப்பினை மேம்படுத்தும் பணிகளில் செயல்படத் தொடங்கியுள்ளது. இணைய சேவையைப் பயன்படுத்துவதில், எந்த கட்டணத் திட்டத்தினையும் மேற்கொள்ளாமல், சில அடிப்படை இணைய வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என பேஸ்புக் தலைவர் மார்க் தெரிவித்தார்.
சில ஆய்வுகள் மூலம் தனக்குக் கிடைத்த தகவல்களையும் மார்க் அறிவித்தார். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களில் 20% பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் உள்ள விஷயங்களில் 80% தான் பத்து மாநில மொழிகளில் உள்ளன. ஆனால், இந்தியாவில் 22 மொழிகள் அரசு அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் பயன்படுத்துவோரில் 65% பேர், ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
இந்த குறைபாடுகளை மனதில் கொண்டு, மார்க் ”இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால்” என்னும் திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த திட்டம், தற்போது இந்தியாவில் அதிக வசதிகளைப் பெறாத மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் புலம் பெயரும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு இணையத்தை நெருங்கிய தொடர்புடையதாகக் கொண்டு செல்வோருக்கு உதவிகளை வழங்கும். ஏனென்றால், இந்த நான்கு பிரிவினர் தான், இணையவெளியில் செல்வதில் அடிப்படையிலேயே சில பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இணைய இணைப்பு கிடைத்தாலும், அவர்கள் மொழிகளில் விஷயங்கள் தரப்படாததால், இணையம் தங்களுக்கு தருவதெல்லாம் ஒன்றுமில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
மார்க் அறிவித்த திட்ட உதவி குறித்து Internet.org தளத்தில் விவரமாகத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கும் வகையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன், இணைய தளம், இணைய சேவை அல்லது அதற்கான புதிய திட்டங்கள் தருவோருக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படும்.
அடுத்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிக பயன் தரும் வகையில் செயல்பட்ட இருவருக்கு தலா 25 ஆயிரம் டாலர் வழங்கப்படும். அடுத்து மார்ச் மாதம் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பங்களை அனுப்ப ஜனவரி 31, 2015 கடைசி நாளாகும்.
நன்றி
Comments