விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு
ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன.
இருப்பினும், ஸ்டார்ட் மெனுவில் தற்போது தரப்பட்டுள்ள வடிவமைப்பு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தைய ஸ்டார்ட் மெனுவின் வசதிகளைக் காட்டிலும் கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் வடிவமைப்பும் மிக எளிதாக அதனை இயக்குவதற்கு வழிகள் தருவதாக அமைந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஸ்டார்ட் மெனு தற்போது லைவ் டைல்ஸ் என்று அழைக்கப்படும், எப்போதும் இயக்கத்தில் உள்ள அப்ளிகேஷன்களின் நிலையைக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வலது பக்க பிரிவில், நீங்கள் விரும்பும், அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை பின் செய்து வைக்கலாம். விண்டோஸ் போன் மெனுவில், நாம் அடிக்கடி அழைப்பவரின் எண்ணை பின் செய்வது போல, இங்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷனை பின் செய்து அமைக்கலாம்.
லைவ் டைல்ஸ் என்பவை உயிர்த்துடிப்புள்ளவை. அதாவது, அதன் இயக்கம் அந்த டைலில் காட்டப்பட்டு கொண்டே இருக்கும். Dynamic என்ற வகையில் அமைந்தவை. உங்கள் இடத்திற்கேற்ற, அந்த நேரத்தைய செய்திகளை, தகவல்களை இவை தந்து கொண்டே இருக்கும். இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டரைக் கூட பின் செய்து வைக்கலாம்.
ஸ்டார்ட் மெனுவின் இடது பக்கம், வழக்கம் போல விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தது போல் தரப்பட்டுள்ளது. எனவே, வழக்கம் போல, இதில் கிடைக்கும் தேடல் கட்டத்தைப் பயன்படுத்தி, நீங்கள் பெற விரும்பும் பைல் அல்லது அப்ளிகேஷனைப் பெறலாம்.
அத்துடன், அண்மையில் நீங்கள் பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியலையும் இதில் பெறலாம். இதில் All Apps மெனுவும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியலையும் பெற்று, நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த அனைத்து புரோகிராம் பட்டியலுடன், நெட்டு வாக்கில் செயல்படும் ஸ்குரோல் பார் தரப்பட்டுள்ளது. எனவே, கூடுதலான புரோகிராம்களை அடுக்காகப் பெற்று குழப்பமடைய வேண்டியதில்லை.
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் மேற்கொண்டது போல, புரோகிராம்களுக்காக பிரவுஸ் செய்திடாமல், இந்த தேடல் கட்டத்தின் வழியாக, எளிதாக அவற்றைப் பெறலாம்.
ஸ்டார்ட் மெனுவினை மிக அதிகமாகப் பயன்படுத்தி, அதனையே சார்ந்து பலர் இருந்ததனை மைக்ரோசாப்ட் உணர்ந்து கொண்டு, இப்போது பழைய முறைப்படி செயல்படும் ஸ்டார்ட் மெனுவினைத் தந்துள்ளது.
குறிப்பாக நிறுவன திட்டங்களை மேற்கொண்டவர்கள், ஸ்டார்ட் மெனுவினை அதிகம் சார்ந்திருந்தனர். இதனை மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டதன் அடையாளமே, இப்போதைய ஸ்டார்ட் மெனு ஆகும்.
ஆனால், அதனுடன் புதிய யூசர் இண்டர்பேஸ் இணைந்து பயன்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை, புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த விடுக்கும் அழைப்பாகும். நிச்சயம் பயனாளர்கள், புதிய வகை இடைமுகத்திற்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
நன்றி
Comments