ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் டேட்டா இழப்பிணை தடுப்பது எப்படி.?
மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
பாதுகாப்பினை உருவாக்குக: ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.
பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்: பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும்.
விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா? சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம்.
ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்: ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப் பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.
அனுமதிகளை அளந்து தரவும்: அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிட வேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும்.
தேவை இல்லாமல் புளுடூத் ஏன்? நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும்.
அப்ளிகேஷன் தணிக்கை: உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ் விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும், பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.
அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்: பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும். சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும் அறிவிக்கும்.
சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில் அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம். ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.
Comments