சாம்சங் கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட்போன்
வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட தன் சாம்சங் கேலக்ஸி எஸ்5 புதிய மொபைல் போனைச் சென்ற வாரம் டில்லியில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முன்னதாக, இந்தபோன், பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் உலகக் கருத்தரங்கில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அப்போது, சாம்சங் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த சில அம்சங்கள் இல்லாததால், பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால், சாம்சங் எப்போதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை ஒட்டியே தன் மொபைல் போன்களை வடிவமைக்கும் என்பதால், இதிலும் பல புதிய சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளிவிலான டிஸ்பிளே, மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் பேட்டரியினை இங்கு குறிப்பிடலாம்.
இந்தியாவில், டில்லியில் இது அறிமுகப்படுத்தப்பட்ட போது, இறுதி விலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ரூ.51,000 முதல் ரூ.53,000 வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சாம்சங் காலக்ஸி எஸ் 4 அறிமுகமானபோது அதன் விலை ரூ.41,500. இப்போது அதன் விலை ரூ.29,500.
இருப்பினும், சாம்சங் கேலக்ஸி எஸ் 5, சாம்சங் போன்களிலேயே அதிக விலை உயர்ந்ததாக, குறிப்பாக ரூ.50,000க்கும் மேலானதாக இருக்கும். தற்போது விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஐக் காட்டிலும், ரூ.10,000 கூடுதலாக இருக்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள்:
5.1 அங்குல அளவிலான முழு எச்.டி. திரை (1920×1080 பிக்ஸெல்கள்), Super AMOLED டிஸ்பிளே கொண்டது. முதன் முதலாக OctaCore Exynos 5422 (QuadCore A15 1.9 GHz & QuadCore A7 1.3 GHz) ப்ராசசர் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட். பின்புறமாக, 16 எம்.பி. திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. வெப் கேமரா 2.1 எம்.பி. திறன் கொண்டது. தூசு மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சிறப்பு தடுப்பு கொண்டது. இதன் தடிமன் 8.1 மிமீ ஆகவும், எடை 145 கிராம் ஆகவும் உள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. இதனை 64 ஜி.பி. வரை உயர்த்தலாம்.
இதன் இன்ப்ரா ரெட் எல்.இ.டி. மூலம் டி.வி. ரிமோட் ஆகப் பயன்படுத்தலாம். இதயத் துடிப்பினைக் காட்டும் சென்சார் தரப்பட்டுள்ளது. 3GHSPA+, WiFi 802.11ac (2X2 MIMO), Bluetooth v4.0 LE, GPS, USB 3.0 மற்றும் NFC ஆகிய தொழில் நுட்பங்கள், நெட்வொர்க்கிற்கென இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,800 ட்அட திறன் கொண்டதாகும். சென்ற மார்ச் 29 முதல், வாங்குவதற்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
வரும் ஏப்ரல் 11ல் தான், சாம்சங் தன் கேலக்ஸி எஸ் 5 போனை, 150 நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. ஆனால், தென் கொரியா மக்கள், அதுவரை பொறுமையுடன் காத்திருக்க விரும்பவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பே, சாம்சங் நிறுவனத்தையே ஆச்சரியப்படவைக்கும் அளவில், அங்கு இயங்கும் எஸ்.கே.டெலிகாம் நிறுவனம், அந்நாட்டில் எஸ்5 போனை விற்பனை செய்திடத் தொடங்கியது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே ஒவ்வொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கும், சோதனை முயற்சிக்காக, எஸ் 5 போன்களை வழங்கியதாகவும், அவை ஏன் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து விசாரிக்க இருப்பதாகவும், சாம்சங் அறிவித்துள்ளது.
நன்றி
Comments