ஆபரேட்டிங் சிஸ்டத்துல இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
கணினி பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருப்பது அதில் உள்ள
அப்ளிகேஷன்களைப் பற்றிதான். உதராணமாக போட்டோஷாப், எம்.எஸ். ஆபிஸ்,
கோரல்டிரா, மீடியா பிளேயர் என்பன போன்ற மென்பொருள்களை மட்டுமே முக்கியமாக
அறிந்து வைத்துள்ளார்கள்.அவைகளை இயக்கச் செய்து, முறைமைப்படுத்தும்
ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பற்றி மிகப் பலருக்கு தெரிந்திருப்பதில்லை.
அதைப்பற்றி எளிய தமிழில் அறிந்துகொள்வோம்.
அடிப்படையில் ஒரு கணினி இயங்குவதற்கு தேவையானது ஓ.எஸ் என்று சொல்லப்படக்கூடிய ஆபரேட்டிங் சிஸ்டம்தான்.
இதில் கணினியை இயங்க வைக்கிறது. அதில் உள்ள அப்ளிகேஷன்கள் செயல்படவும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
உதாரணமாக சொல்தென்றால் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் உள்ள சக்கரங்களைப்
போன்றது. என்னதான் வாகனத்தினுள் அனைத்து பாகங்களும் இணைக்கப்பட்டாலும்,
சக்கரம் இல்லாமல் வாகனம் ஒரு அடி கூட நகர முடியாது.
அதுபோல தான் இந்த இயங்குதளம் என்கிற Operating System.
ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?
இயங்குதளத்தை ஒரு அற்புதமான நிர்வாகி என்று சொல்லலாம். கணினியில்
மேற்கொள்ளப்படும் பணிகளை அற்புதமாக நிர்வகிக்கிறது இது. கணினியில் உள்ள
Hardware partsகளை நிர்வகிப்பது இந்த இயங்குதளமே. Monitor, Keyboard,
Printer போன்ற ஹார்ட்வேர்களை நிர்வகித்து பணிகளை வாங்குவதும் இதன்
முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. உதாரணமாக கணினியில் நாம் கொடுக்கும்
இன்புட்களை கவனித்து, அந்த இன்புட்களுக்கான அவுட்புட் என்ன என்பதை திரையில்
காட்டும் செயல்களை செய்கிறது. இது பல்வேறு பணிகளை நிர்வகிக்கிறது
என்றாலும் இவற்றை முதன்மையான நிர்வாகப் பணிகள் எனலாம்.
1. நினைவக மேலாணமை
2. பணி மேலாண்மை
3. கோப்பு மேலாண்மை
4. உள்ளீடு மற்றும் வெளியீடு மேலாண்மை
ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புத்திசாலித்தனம்:
நீங்கள் பயன்படுத்தும் கணினியில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்துகொண்டு,
அதற்கேற்றார்போல அதைப் பயன்படுத்திக்கொள்ளும். குறிப்பாக ஆப்பரேட்டிங்
சிஸ்டம் நினைவகத்தில் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் மென்பொருகள்
இருப்பதற்கான இடம், தட்டச்சிடுகிற விவரங்கள் இருக்கும் இடம், Disk-ல்
கோப்புகளைப் படிக்கும்போது அதனுடைய விபரங்களை வைக்க வேண்டிய இடம் ஆகியவற்றை
இதுவே தீர்மானிக்கிறது.
மல்டி டாஸ்க் - Multi Task
தற்பொழுது உபயோகத்தில் உள்ள அனைத்து ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த மல்டி
டாஸ்க் அமைப்பு உள்ளது. மல்டி டாஸ்க் அமைப்பு என்பது கணினியில் ஒரே
நேரத்தில் பல்வேறு அப்ளிகேஷன்களைத் திறந்து பணிபுரிவதாகும். உதராணமாக
எம்எஸ் வேர்ட், போட்டோஷாப், எக்செல், இணைய உலவுவதல் போன்ற பல்வேறு
புரோகிராம்களைத் திறந்து அதில் பணிபுரிவதைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு பல்வேறு புரோகிராம்கள் செயல்பாட்டில் இருக்கும்போது அவை ஒன்றுக்கு
ஒன்று பிரச்னையில்லாமல், சீராக இயங்குவதற்கு வழிவகை செய்கிறது ஆபரேட்டிங்
சிஸ்டம்.. அதாவது வாய்க்காலில் ஓடும் நீரை , நான்கைந்து வயல்களுக்கு
செல்லும் வகையில் சரியான பாதைக்கு மடை திருப்புவதைப் போல என்று கூறலாம்.
வாய்க்கால் எங்கும் நீரை இடையில் உடைப்பு எடுக்காமல் பார்த்துக்கொள்வதைப்
போல... இந்த புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்ளாமல் தன்னுடைய
பாதையில் செயல்படும்படிச் செய்வது இந்த ஆபரேட்டிங் சிஸ்டமே..!
கோப்பு நிர்வாகம்:
(File Management )
நீங்கள் உங்கள் கணினியில் உருவாக்கும் கோப்புகள், மற்றும் நீங்கள்
பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கான கோப்புகள், அவற்றிற்கான கோப்புறைகள்
போன்றவற்றையும் இயங்குதளமே பராமரிக்கிறது. நீங்கள் கோப்புகளின் மீது
செயல்படுத்தும் அனைத்து வேலைகளுமே ஆபரேட்டிங் சிஸ்டத்தால்
நடத்தப்படுபவைதான்.
உதாரணமாக ஒரு கோப்பை அழிக்கிறீர்கள் என்றால் அதை சரியான அழிப்புச் செயலாக மாற்றுவது ஆபரேட்டிங் சிஸ்டம்தான்.
நீங்கள் கொடுக்கும் கட்டளைகளைப் புரிந்துகொண்டு, Delete கொடுத்தால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கோப்பை அளிக்க வேண்டும் எனப்புரிந்துகொண்டு அந்த
செயலைச் செய்கிறது.
அதுபோல நீங்கள் கோப்புகளை நகர்த்துதல், கோப்புகளை ஓரு கோப்புறையிலிருந்து
மற்றொரு கோப்புக்கு கொண்டுசெல்லுதல், காப்பி செய்தல் , அந்த கோப்புகளுக்கு
பெயர்மாற்றம் செய்தல் போன்ற செயல்களையும் செய்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே.
ஒரு குறிப்பிட்ட பணியை இரண்டு பகுதிகளாப் பிரித்து இரு cpu க்களிடம்
கொடுத்து அந்த வேலையை முடிக்கச் செய்யும் ஆற்றலையும் பெற்றுள்ளது operating
system.
கோப்புகளை உருவாக்கி அதைச் சேமிக்கும்பொழுது அது சேமிக்கப்படும் நேரம்,
தேதி, கிழமை ஆகியவற்றை குறிப்பதும், கோப்புகளை மறைக்க, கோப்புகளை படிக்க
என்கிற Hidden, Readonly பண்புகளை கொடுக்கும்பொழுது அவற்றை மேற்கொள்வதும்,
ஒரு குறிப்பிட்ட கோப்பின் பெயரை அதே வகையான கோப்பிற்கு பெயரை அதே பெயரைக்
கொடுக்கும்பொழுது ஏற்றுக்கொள்ளமல் செய்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும்
வேலைகள்தான்.
ஆக, கணினியில் நீங்கள் எந்த ஒரு பணியை மேற்கொள்ளும்பொழுது, அதற்கான
அடிப்படைச் செயல்களைச் செய்வதும், வகுத்துக் கொடுப்பதும் கண்ணுக்குத்
தெரியாத இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான்.
அதனால்தான் இதனை இயங்குதளம் என்கிறோம். இதன் மீதுதான் மற்ற அனைத்தை
அப்ளிகேஷன்களும் இயங்குகின்றன. கணினிக்குத் தேவையான ஒரு அடிப்படை
மென்பொருள், இயக்க மென்பொருள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் அது மிகையாது.
அவனின்றி அணுவும் அசையாது என்பது போல, ஆபரேட்டிங் சிஸ்டம் இன்றி கணினியும்
அசையாது..
நன்றி தங்கம்பழனி
Comments