ஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா?

ஹார்ட்
ட்ரைவ் திடீரென செயல் இழந்து நின்று போவது அடிக்கடி நிகழும் ஒன்றாக இல்லை
என்றாலும், நிச்சயமாய் ஏற்படும் இது போன்ற நிகழ்வு, நம் வேலைகளை முடக்கிப்
போடும் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படிப்பட்ட
சூழ்நிலையைத் தவிர்க்க, நன்றாக ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக்
கொண்டிருக்கும்போதே, புதிய ஹார்ட் ட்ரைவ் ஒன்றினை இன்ஸ்டால் செய்து
இயக்கலாமா?
இந்த
பயம் பலரின் மனதில் உள்ளது. இருப்பினும் ஹார்ட் ட்ரைவ் மாற்றுவது சற்று
பணச் செலவு ஏற்படுத்தும் என்பதால், ஹார்ட் ட்ரைவ் மாற்றும் வேலையை அடிக்கடி
மேற்கொள்வது பலரால் முடியாத காரியம்.
எனவே, ஹார்ட் டிஸ்க் செயல் இழக்கும் நிலையை முன் கூட்டியே அறிய சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
முதலாவதாக, ஹார்ட் டிஸ்க் பராமரிப்பு சோதனை ஒன்றை அவ்வப்போது
செயல்படுத்தலாம். இதனை S.M.A.R.T. என அழைப்பார்கள். இதனை விரித்தால், Self
Monitoring Analysis and Reporting Technology எனக் கிடைக்கும். தானாகச்
சோதனை செய்து, தன் செயல்பாடு பற்றிய குறிப்புகளை வழங்குவது என்று இதற்குப்
பொருள்.
இந்த சோதனையை மேற்கொண்டால், ஹார்ட் ட்ரைவில் மோசமான நிலை ஏதேனும்
ஏற்பட்டுள்ளதா எனவும், அதிக வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறதா எனவும்
காட்டப்படும். Active@ என்னும் நிறுவனம் Hard Disk Monitor என்னும்
புரோகிராமினை இத்தகைய சோதனைகளை மேற்கொள்வதற்காக வடிவமைத்து வழங்குகிறது.
இதனைப் பயன்படுத்தி, ஹார்ட் டிஸ்க்கின் S.M.A.R.T. நிலையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம். இதனை http://www.diskmonitor. com/ என்ற
முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெற்றுப் பயன்படுத்தலாம். 14 நாட்கள்
மட்டுமே இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்த கட்டணம்
செலுத்த வேண்டும்.
இரண்டாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹார்ட் டிஸ்க்கின் வாழ்நாளைக்
குறைக்கும் சில விஷயங்களில் கவனம் செலுத்து வதாகும். குறிப்பாக, இந்த
வகையில் வெப்பம் உருவாவதையும், மின் சக்தி தடுமாற்றத்தினையும் கூறலாம்.
வெப்பம் உருவாவதற்குக் காரணம், கம்ப்யூட்டரின் உள்ளாக, தூசு தொடர்ந்து
படிவதாகும். பூச்சிகள் மற்றும் மனிதர்களின் உரோமத் துண்டுகள் சென்று இந்த
தூசியுடன் இணைந்து, ஒரு படிமமாக படர்வது, வெப்பத்தினை வெளியேற விடாமல்
தடுத்து, ஹார்ட் ட்ரைவின் செயல் தன்மையைப் படிப்படியாகக் குறைந்துவிடும்.
எனவே குறிப்பிட்ட காலத்தில், ஹார்ட் டிஸ்க், அதன் மேலாகவும், அருகேயும்
அமைக்கப்பட்டுள்ள சிறிய மின்விசிறிகள், சர்க்யூட் போர்ட் மற்றும் பிற உதிரி
பாகங்களில் சேர்ந்து கொள்ளும் தூசுகளை, அழுத்தமான காற்றினை
வெளிப்படுத்தும் சிறிய சாதனங்கள் மூலம் வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு செய்திடுகையில், தண்ணீர் ஈரம் அல்லது வேறு வகையான திரவத் துளிகள்,
கம்ப்யூட்டரின் உள்ளாகச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும்,
கம்ப்யூட்டரின் பாகங்களைத் தொடும் முன், நம் உடம்பில் உள்ள ஸ்டேட்டிக்
மின் சக்தியை வெளியேற்றிவிட்டுத் தொட வேண்டும்.
மின்சக்தி
இடையூறின்றி, தொடர்ந்து ஒரே அளவில், கம்ப்யூட்டருக்குக் கிடைப்பது
அவசியமான தேவையாகும். இதற்கு நல்ல தன்மை உள்ள பேட்டரிகள் கொண்ட யு.பி.எஸ்.
போன்ற சாதனங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் திடீரென ஏற்படும் மின்சக்தி
தடை தடுக்கப்படும்.
இதனால்,
ஹார்ட் ட்ரைவில் எழுதி அல்லது படித்துக் கொண்டிருக்கும் ஹெட் மற்றும்
ட்ரைவ் பழுதாவது தடுக்கப்படும். இப்போது வரும் ஹார்ட் ட்ரைவ்கள், மின்சக்தி
தடை ஏற்படுகையில், தாமாகவே இயங்காத பாதுகாப்பான நிலைக்குத் திரும்பிடும்
வகையில் அமைக்கப்படுகின்றன.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலே குறிப்பிட்ட யு.பி.எஸ். போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதே நல்லது.
Comments