தகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை?
அண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (Broadband Tech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.
தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் ஆலோசகர் ஏ.கே. பார்கவா உரையாற்றுகையில், “புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதிகமான தகவல் பதிவு மற்றும் பரிமாற்றம் காரணமாக, டேட்டா பரிமாற்ற கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு 3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை வரிசைக்கான ஏலத்தினை நடத்துவதில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், டேட்டா பரிமாற்ற கட்டணத்தைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறது.
அலைக்கற்றை வரிசை அதிகமாகவே கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதால், டேட்டா பரிமாற்ற சேவையில், பைபர் ஆப்டிகல் துணையுடன் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். இதனால், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் மாறுதலான திட்டங்களுடன் களத்தில் இறங்கும்.
மொபைல் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் பேசுகையில், ஒலி மற்றும் டேட்டா பரிமாற்றத்தில், இந்தியாவில் வரும் நாட்களில் 35% வளர்ச்சி ஏற்படும் என்றார். அதற்கேற்ற வகையில், இதில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப கட்டமைப்பினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
அரசு விதிக்கும் மிக அதிகமான கட்டணம் இதற்குத் தடையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். USO Fund நிதிக்காக, நிறுவனங்களின் பங்களிப்பு தற்போது இருக்கும் 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அரசு, கொள்கை வகுப்பவர்கள், கண்காணிப்பு அமைப்புகள், சேவை நிறுவனங்கள் மற்றும் சாதனங்களைத் தயாரிப்பவர்கள் என அனைத்துப் பிரிவினரும் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் வெற்றியை அடையலாம் என்று இந்த கருத்தரங்கில் அனைவரும் ஒருமுகமாகக் கருத்து தெரிவித்தனர்.
நன்றி
Comments