புத்தாண்டில் மைக்ரோசாப்ட்டின் திட்டம்..




வரும் 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சவால் நிறைந்ததாக இருக்கும். விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்பட்ட நற்பெயர் இழப்பினை, விண்டோஸ் 10 மூலம் சரி செய்திட வேண்டிய நிர்ப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் உள்ளது. ஆனால், நிச்சயம் மைக்ரோசாப்ட் இந்த சவாலைச் சந்தித்து வெற்றிக் கொடி நாட்டும்.

சென்ற 2009 ஆம் ஆண்டில், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இதே போல, மைக்ரோசாப்ட் இழந்த பெயரை ஈட்டுத் தந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் வேறு விற்பனைச் சந்தையில் இருந்து வந்தாலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் முக்கிய இடம் கொண்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், சர்வர்களிலும் இயங்கும் விண்டோஸ் சிஸ்டம், வருமானத்தை அள்ளித் தந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும், மைக்ரோசாப்ட் இதனைத் தேய்ந்த நிலைக்குச் செல்லவிடாது. 

வரும் ஆண்டில், வர இருக்கும் விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல வகைக் கட்டமைப்புகளில் செயல்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்கும். போன், டேப்ளட் பி.சி., பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் எக்ஸ்பாக்ஸ் உட்பட அனைத்திலும் இணைந்து இயங்கக் கூடியதாக இருக்கப் போகிறது. 

ஆனால், இதைத்தான், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 வெளியீட்டின் போதும் அறிவித்தது. மேலும், நம் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான நம் மதிப்பினைக் குறைத்து, க்ளவ்ட் ஸ்டோரேஜ் முறைக்கு, கம்ப்யூட்டரை இணைத்தது. அதே போல, மொபைல், டேப்ளட் பி.சி. ஆகியவற்றையும் கொண்டு வந்தது. ஆனால், சரிந்த விண்டோஸ் 8 விற்பனை, இதில் மக்களுக்கு விருப்பம் இல்லை என்று காட்டியது. அவர்கள், தங்கள் கம்ப்யூட்டர்களையே அதிகம் நேசிப்பவர்களாக இருக்கின்றனர். எனவே, க்ளவ்ட் முக்கியத்துவம் அவர்களிடம் எடுபடவில்லை. இந்த இழப்பினைத்தான், விண்டோஸ் 10 ஈடுகட்ட வேண்டும். 

ஆனால், தற்போது, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுடன் கலந்தே, முக்கியமாக நிறுவனங்களாக இயங்கும் வாடிக்கையாளர்களுடன் கலந்தே, விண்டோஸ் 10 ஐ வடிவமைத்து வெளியிடுகிறது. அவர்களிடமிருந்து பெரும் அளவில் பின்னூட்டங்களை, சோதனை பதிப்பின் அடிப்படையில் பெற்றுள்ளது. இது விண்டோஸ் 8 வெளியீட்டின் போது, மைக்ரோசாப்ட் மேற்கொண்ட அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது. 

அடுத்ததாக, மைக்ரோசாப்ட் தன் க்ளவ்ட் அமைப்பினை இன்னும் வலுவாக மாற்றியுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாதபடி பார்த்துக் கொண்டுள்ளது. அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்கத்திற்கேற்ற வகையில், இதனையும் வடிவமைக்கிறது. விண்டோஸ் 8 அறிமுகப்படுத்தப் பட்ட போது, ஒன் ட்ரைவ் (அப்போது ஸ்கை ட்ரைவ்) பயனாளர்கள் விருப்பத்துடன் பயன்படுத்தும் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ஆக அது இல்லை. ஆனால், இப்போது மைக்ரோசாப்ட் வழங்கும் பல சாதனங்கள், மொபைல் உட்பட, க்ளவ்ட் ஸ்டோரோஜை மிகச் சரியாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தொடு உணர் திரை இல்லாத கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 10, அதே வேகத்துடனும் தெளிவுடனும் இயங்கும் வகையில் தரப்பட வேண்டும். 'One Windows' என மைக்ரோசாப்ட் தந்துள்ள உறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் பலவீனம் என்று சொன்னால், அது மொபைல் போன் பிரிவாகத்தான் இருக்கும். இன்னும் இதன் பங்கு 2.9% ஆகவே இருந்து வருகிறது. இதற்கான அப்ளிகேஷன்கள் தேவையான அளவில் இல்லை என்னும் குற்றச்சாட்டு முன்பு இருந்து வந்தது. தற்போது அந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் அளவினை விஞ்சும் வகையில் இல்லை என்றாலும், தொடர்ந்து இது பெருகி வருகிறது. 2015ல், இந்தப் பிரிவில், மைக்ரோசாப்ட் அதிகக் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம். மேலும், விண்டோஸ் 10, அனைத்து சாதனங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கப் போவதால், நிச்சயம், முழுமையான வெற்றி முனையை மைக்ரோசாப்ட் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து நாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், அதன் தலைமை நிர்வாகி, இந்தியாவைச் சேர்ந்த நாதெள்ளாவுக்கும் இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தலாம். சில ஆண்டுகளாக, விண்டோஸ் 8 குறித்து வாடிக்கையாளர்கள் தந்து கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும். விண்டோஸ் 10க்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மேம்படுத்துவது, விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இரண்டாவதாக, விண்டோஸ் 10 எதிர்காலத்தின் இயக்கத் தொகுப்பாக, எதிர்பார்க்கப்படும் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். நாதெள்ளா ஒரு முறை தன் நிறுவனத் தயாரிப்புகளின் எதிர்கால இலக்கு குறித்து பேசுகையில் "re-inventing productivity," எனக் குறிப்பிட்டார். இது சற்று மிகையாக அப்போது தெரிந்தாலும், வருங்காலத்தில் இதுவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உயர்த்தப்போகும் இலக்காகவும் இருக்கப் போகிறது. அது மட்டுமின்றி, சாதனங்கள் பக்கமும் அவற்றிற்கான சேைவகள் பக்கமும் மைக்ரோசாப்ட் தனிக் கவனம் செலுத்த வேண்டும். 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் செல்லாத இடங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்குத் தராத அனுபவத்திற்கு, அவர்களை மைக்ரோசாப்ட் எடுத்துச் செல்ல வேண்டும். புதிது புதிதாய் அனுபவங்களும் வசதிகளும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும். இது தற்போது சாதிக்கப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அண்மையில் வெளியான ஸ்கைப் ட்ரான்ஸ்லேட்டர் (Skype Translator) தொகுப்பு முயற்சி, இதுவரை டிஜிட்டல் உலகில் யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத ஒன்றாகும். இதனுடன் டிஜிட்டல் கதை சொல்லியான Sway மற்றும் மைக்ரோசாப்ட் பேண்ட் (Smart watch) உடல்நலம் காட்டும் மணிக்கட்டு வளையம் போன்றவை, புதிய வசதிகள் தரும் முயற்சியாகும்.

விண்டோஸ் 10, வெறுமனே விண்டோஸ் 7 சிஸ்டத்தின் அடுத்த மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாக இருக்கக் கூடாது. மேலே சொல்லப்பட்ட இலக்குகளை அடையும் வழிகளைக் கொண்டுள்ள புதிய கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில், அது முழுமையான வடிவமைப்பினைக் கொள்ள வேண்டும். 

இவை அனைத்தும் சற்று மிகையான இலக்குகளே. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இயலாதது அல்ல. வரும் 2015 ஆம் ஆண்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்டாக மாற வேண்டுமானால், விண்டோஸ் 10 குறித்து மட்டும் எண்ணாமல், விண்டோஸ் 11 னை உருவாக்க என்ன என்ன இலக்குகள் தேவைப்படும் என்பதனையும் மைக்ரோசாப்ட் சிந்திக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?