விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட அம்சங்கள்..
ஜூலை 29ல் அறிமுகம் செய்யப்பட்ட மைரோசப்டின் விண்டோஸ் 10-ல் இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட சில அம்சங்கள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல் சற்று ஏமாற்றத்தினைத் தரலாம். அவை எவை என்று இங்கு பார்க்கலாம்.
1. விண்டோஸ் மீடியா சென்டர்: விண்டோஸ் 10லிருந்து நீக்கப்படும் மிகப் பெரிய வசதி விண்டோஸ் மீடியா சென்டர். மைக்ரோசாப்ட் தன் வலைமனையில் இதனை அறிவித்துள்ளது.
விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் அல்ட்டிமேட், விண்டோஸ் 8 ப்ரோ, விண்டோஸ் 8.1 ப்ரோ ஆகிய சிஸ்டம் தொகுப்புகளிலிருந்து, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொண்டால், அவற்றில், விண்டோஸ் மீடியா சென்டர் இருக்காது. அப்டேட் செய்யப்படுகையில் இந்த அப்ளிகேஷன் நீக்கப்படும்.
2. டிவிடி இயக்கும் செயலி: விண்டோஸ் மீடியா சென்டர் வழியாக, டிவிடிக்களை இயக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். மீடியா சென்டர் நீக்கப்படுவதால், டிவிடிக்களை இயக்க தனியான ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள வேண்டும்.
3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் நாம் இயக்கிக் கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.
4. விண்டோஸ் 10 ஹோம் பதிப்பினைக் கொன்டிருப்பவர்களின் கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் பைல்கள் தாமாகவே பதியப்படும். விண்டோஸ் 10 ப்ரோ மற்றும் என்டர்பிரைஸ் ஆகிய தொகுப்புகள் வைத்திருப்போர் மட்டும் அப்டேட் பைல்கள் தங்களுக்குத் தேவை இல்லை என்று கருதினால், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும்படி அமைக்க வசதி தரப்பட்டுள்ளது.
5. பிரபல விளையாட்டுகள்: சாலிடெர், மைன்ஸ்வீப்பர் மற்றும் ஹார்ட்ஸ் ஆகிய விளையாட்டுகள், விண்டோஸ் 7 தொகுப்பு வரை தரப்பட்டு வந்தன. விண்டோஸ் 10 சிஸ்டம் இதன் மீது அப்டேட் செய்யப்படுகையில், இவை நீக்கப்படும். இவற்றிற்குப் பதிலாக, “Microsoft Solitaire Collection” மற்றும் “Microsoft Minesweeper” என்ற பெயரில் இந்த விளையாட்டுகள் நிறுவப்படும்.
6. விண்டோஸ் லைவ் எசன்ஷியல்ஸ்: இந்த செயலி உங்கள் சிஸ்டத்தில் பதியப்பட்டிருந்தால், ஒன் ட்ரைவ் அப்ளிகேஷன் நீக்கப்படும். இதற்குப் பதிலாக, க்ளவ்ட் ஸ்டோரேஜ் வகைப் பதிப்பு ஒன்று நிறுவப்படும்.
மேலே சொல்லப்பட்டவை நீக்கப்பட்டாலும், விண்டோஸ் 10 சிஸ்டம் தர இருக்கும் புதிய வசதிகள் பல, இந்தக் குறையினை நீக்கிவிடும். புதிய எட்ஜ் பிரவுசர், புதிய இணைந்த கேண்டி க்ரஷ் கேம், விண்டோஸ் போன் மேப் அப்ளிகேஷன் எனப் பலவற்றை இந்த வகையில் குறிப்பிடலாம்.
Comments