இணைய சந்தையில் கடும் போட்டி..



இந்தியாவில், 4ஜி அலைவரிசைப் பயன்பாடு, வரும் ஆண்டில் வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், 1.5 கோடி பேர், இந்த அலைவரிசையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் தகவல் பரிமாற்ற சேவை நிறுவனங்கள், 1,800 MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை இதற்குப் பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர்கள், மொபைல் டேட்டா பரிமாற்றத்தில் கூடுதல் வேகத்தினைக் கொள்ள விரும்புவதால், நிச்சயம் 4ஜி அலைவரிசைப் பயன்பாட்டினை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. PwC India என்ற அறிக்கையில் இந்த கணிப்புகள் தரப்பட்டுள்ளன. 

ஏற்கனவே பாரதி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஏற்கனவே 4ஜி அலைவரிசை சேவையினை வழங்கி வருகின்றனர். கொல்கத்தாவில், 2012 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, பின்னர் பல நகரங்களில் விரிவடைந்தது இந்த சேவை. 2014 ஆம் ஆண்டில், ஜூலை மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமானது. ஏர்செல், இதே சேவையினை, 2014ல், தெலுங்கானா, ஒடிஷா, அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது. 

தற்போது ரிலையனஸ் நிறுவனமும் இந்த பிரிவில் இறங்கியுள்ளது. தன் துணை நிறுவனமான ஜியோ இன்போகாம் (Jio Infocomm) மூலம் இந்த சேவையினை வழங்க இருக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் ஜாம்நகர் என்ற நகரில் மட்டும் இது வழங்கப்படுகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல நகரங்களில், ஜியோ இன்போகாம் இச்சேவையை வழங்கும். முதலில், டில்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. 

இதற்கான தொடக்கமாக, ஜியோ இன்போகாம், மும்பையில், பல பெரிய அளவிலான வீட்டு வளாகங்களில், அறிமுகச் சேவையாக, இலவச மூன்று மாத 100 mbps வேக இணைய இணைப்பினை வழங்க முயற்சிகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது. 

அரசின் “டிஜிட்டல் இந்தியா” மற்றும் “ஸ்மார்ட் சிட்டீஸ்” திட்டங்களின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்த வை பி இணைப்பு வழங்குவது இந்த ஆண்டில் சாத்தியம் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் பார்க்கையில், 4ஜி அலைவரிசை சேவையில், தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களிடையே பலத்த போட்டி இருக்கும் என்று தெரிகிறது. அரசு இந்த சேவை குறித்த தன் நிலைப்பாட்டினையும், கொள்கை விதிகளையும் இன்னும் முறையாகத் தெரிவிக்காததால், போட்டியில் பல நிறுவனங்கள் இறங்கிட வாய்ப்பு உள்ளது. 

Reliance 4G LTE போன்று புதிய நெட்வொர்க் கட்டமைப்புகள் உருவாக உள்ளன. இதனால், 2010 ஆம் ஆண்டில், மொபைல் போன் சேவையில் ஏற்பட்ட கடுமையான போட்டி போல, இப்போதும் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க